நேர்காணல்
“ஆராய்ச்சி என்பதும் ஒருவிதமான அரசியல் செயல்பாடுதான்”
திறனாய்வாளர் க. பஞ்சாங்கம்
உரையாடல்
க. வினோதா, நி. கனகராசு, கா. விக்னேஷ், செ. இர. வினிதா
தமிழ் ஆய்வுச்சூழலில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துவருபவர் பேரா. க.பஞ்சாங்கம். கவிதை, மொழிபெயர்ப்பு, திறனாய்வு என பன்முக வெளிகளில் இயங்கி வருபவர். சிலப்பதிகாரத் திறனாய்வுகள் என்ற பொருண்மையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். புதுவை அரசுக் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்ச்சூழலில் மேலை இலக்கியக் கோட்பாடுகளை அறிமுகம் செய்து வருபவர்களுள் இவரின் பங்களிப்பும் முதன்மையானது. கோட்பாட்டை உள்வாங்கிய ஆய்வுகளைத் தமிழ் ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அவ்வாறான மாணவர்களை வளர்த்தெடுத்து வருபவர். ஒட்டுப்புல், பயணம், ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம், அக்கா ஆகிய படைப்புகளும் பெண் – மொழி – புனைவு, நவீனக் கவிதையியல்: எடுத்துரைப்பியல், தலித்துகள் – பெண்கள் – தமிழர்கள், தொன்மத் திறனாய்வு, பெண் – மொழி – படைப்பு, ஹெலன் சீக்சு – புதிய பெண்ணியல் கோட்பாட்டாளர், சிலப்பதிகாரத் திறனாய்வு வரலாறு, மொழி தரும் வலியும் விளையாட்டும், இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடும், புதிய கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம், பின்காலனித்துவக் கோட்பாட்டு நோக்கில் ஒரு நூற்றாண்டுத் தமிழிலக்கியம், இன்றைய இலக்கியமென்பது தலித்திய இலக்கியமே, புதிய வெளிச்சத்தில் தமிழிலக்கிய வரலாறு, ஆய்வு நெறிமுறைகள், மொழியாக்கமெனும் படைப்புக்கலை, நவீனக் கவிதைகளும் என் வாசிப்புகளும் ஆகிய ஆய்வுகளும், இலக்கியத்தில் தொல்படிவம், பெண்ணெனும் படைப்பு – சில மானுடவியல் குறிப்புகள், நான் எப்படி எழுதுகிறேன் ஆகிய மொழிபெயர்ப்புகளும் இவரது பங்களிப்பில் குறிப்பிடத்தக்கன. பேராசிரியர் கா.சிவத்தம்பி கணையாழி விருது, மேலும் விருது, விளக்கு இலக்கிய அமைப்பின் புதுமைப்பித்தன் நினைவு விருது ஆகியன இவரது சிறந்த திறனாய்வுப் பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டன. தமிழ்க் கல்விப் புலங்களில் இவரின் இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடும் என்ற நூல் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
க. வினோதா : கோட்பாடு என்பது அடிப்படையில் ஒன்றிற்கான வரையறையா, விளக்கமா?
க.பஞ்சாங்கம் : வாழ்க்கை, கலை இலக்கியம் என்கிற எல்லை இல்லா வெளியைக் குறிப்பதொடு வரையறைக்குள் நின்று விளக்குவதன் மூலமாக நமது புரிதலுக்குள் கொண்டு வர முயலுதல் கோட்பாடு அல்லது கொள்கை எனச் சொல்லலாம். கொள் என்பதுதான் வேர்ச்சொல், கொள்ளுதல், உள்வாங்கிக் கொள்ளுதல் என்றுதான் அதன் பொருள். கொள் என்பதோடு ‘பாடு’ என்ற விகுதி சேரும்போது கோட்பாடு என்றாகிறது ‘கை’ என்ற விகுதி சேரும்போது ‘கொள்கை’ என்றாகிறது.
க. வினோதா: புதிய புதிய கலைச்சொற்கள் மூலம் பெயரிடுதல், வரிசைப்படுத்துதல், வகைப்படுத்துதல் – இவைகள் குறித்த தங்களின் மதிப்பீடு என்ன?
பொருளுக்குப் பெயரிதல் என்பது புரிதலுக்கான நமது பயணத்திற்கு அடிப்படையாக அமைகிறது. இந்தப் பெயரிடுதல்தான் துறைசார்ந்த கலைச்சொற்களாக வடிவம் எடுக்கின்றன. பிரமாண்டமான இந்த இயற்கைக்கு நடுவில் வந்து பறந்து வாழ நேர்ந்த மனித உயிரின் மகத்தான சாதனை இந்தச் ‘சொற்களை’ உற்பத்தி செய்து கொண்டதுதான். மனித இருப்பை வடிவமைப்பது சொற்கள்தான். “ஒரு சொல்லுக்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையில் நடக்கும் சண்டைதான் மனித சமூகத்தின் மொத்த வர்க்க போராட்டமும்” என்கிறார் அல்தூசர். எனவே அறிவின் அல்லது புரிதல் திறனின் அடையாளமே இத்தகைய கலைச்சொற்களைக் கைப்பற்றுவதும் வரிசைப்படுத்தி வகைப்படுத்துவதில்தான் இருக்கிறது; இந்தப் பண்பு கூடக்கூடப் புரிதலின் திறமும் தரமும் கூடுதலாக நமக்குள் கூடிவரும். தமிழ்ச்சூழலில் குறிப்பாகத் திறனாய்வுத் துறையில் இக்கலைச்சொற்களின் போதாமையை என்னுடைய ‘தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு’ என்ற நூலில் விரிவாக விளக்கி இருக்கிறேன். தமிழ் போன்ற வேற்றுமொழி ஆதிக்கத்திற்கு நூற்றாண்டு காலமாக உள்ளாகிக் கிடக்கும் ஒரு மொழிக்கு இந்த விபத்து தவிர்க்க முடியாதுதான்; ஆனால் ஜெர்மனி, பிரஞ்சு, சப்பான் போல அனைத்து வகையான கல்வியையும் ஒட்டுமொத்தமாக தமிழ்ச்சமூகம் தாய்மொழியிலேயே கற்பதற்கான நெறிமுறையைக் கண்டடையும் போதுதான், தமிழும் வளம் பெறும்; தமிழர்களின் அறிதல் திறனும் வலுப்பெறும்; தமிழர்தம் வாழ்வும் தரமாக அமையும்.
க. வினோதா : மொழிக்கும் சிந்தனைக்கும் இடையிலான தொடர்பை எவ்வாறு விளக்குவீர்கள்?
நல்ல கேள்வி, இதுவொரு தத்துவார்த்த சொல்லாடல் சார்ந்தது. ஏற்கனவே பிளேட்டோ தொடங்கி காரல் மார்க்ஸ்வரைப் பேசியுள்ளார்கள். நான் நமது காலத்தில் இத்தொடர்பை விளக்கிய ழாக் லெக்கானின் உளவியல் பார்வையில் புரிந்து வைத்துள்ளேன்.
ஏற்கனவே சுற்றியுள்ள பொருட்கள் குறித்தும் சூழல் குறித்தும் நம் மொழி, வார்த்தைகளால் புனைந்து வைத்திருக்கக்கூடிய ஒரு சமூக வெளியில்தான் புத்தம் புதிய மனித உயிர் வந்து விழுகிறது; அவ்வாறு விழுகிற அந்த உயிரின் மூளை முட்டையிலுள்ள வெள்ளைக்கரு போலத்தான் இருக்கிறது; பிறகு தாய், குடும்ப உறுப்பினர்கள் என்று தன்னைச் சுற்றி இருக்கும் ‘மனித பொருள்கள்’ உதிர்க்கும் சொற்கள் அந்த வெள்ளை மூளையில் போய் விழுந்து பதியப்பதியத்தான் – அதாவது குழந்தை மொழி உலகிற்குள் நுழைய நுழையத்தான் – அதற்கான நினைவு அல்லது சிந்தனை உலகம் அரும்பத் தொடங்குகிறது என்று விளக்குகிறார் லக்கான்; ஆக பொருளாலான உலகத்தால் சூழப்பட்டிருக்கிறோம் என்று பொருள்முதல்வாதிகள் வைத்த பார்வையை விட, அந்தப் பொருட்கள் குறித்து மொழி வார்த்து வைத்திருக்கும் கருத்துகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இந்த உலகச் சூழலை உள் வாங்குகிறோம் என்றுதான் இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது; இதைக் கருத்துமுதல்வாதம் அல்லது மொழிமைய வாதம் என்று கூறிவிட்டு நகர்ந்திட முடியாது; மனிதர்களால் உள்வாங்கப்பட்டிருக்கும் (மற்ற உயிர்களுக்கு எப்படியோ தெரியாது) இந்த உலகம் / வாழ்க்கை குறித்த அறிதல் எல்லாமே பிறந்த குழந்தைப் பருவத்தியிலிருந்து இவர்களுக்குள் வந்து சேர்ந்த மொழிக்குறியீடுகளால் ஆனது என்பதே என் புரிதலாக இருக்கிறது.
இதைப் புரிந்து கொள்ள ஓர் எடுத்துக்காட்டைச் சுட்டிக்கூறலாமென்று நினைக்கிறேன். (எடுத்துக்காட்டு : எப்பொழுதும் புரிதலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது; திசை திருப்பிச் சுருக்கிவிடக் கூடியது என்றாலும்) நமது திரைப்படக் கதாநாயர்களை நமது மக்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்; அந்த மனிதப்பொருளோடு இவர்களுக்கு நேரடியாக எந்தப் பழக்கமும் இல்லை; ஆனால் திரைப்படக் காட்சியில் ஒப்பனைக் கலைஞர், ஒளி, ஒலிக் கலைஞர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், கதைப்பின்னல், எடுத்துரைப்பு உத்தி, பின்புலக் காட்சி முதலிய பல்வேறு தொழில்நுட்பங்களால் கட்டமைக்கப்படும் ஒரு ‘பிம்பத்தைப்’ ஒரு நிழலைப் பார்த்துவிட்டு அந்தக் கதாநாயகரைப் புரிந்துக்கொண்டோம்; அவருக்காக உயிரையே கொடுப்போம் என்று அடம்பிடிக்கிறார்கள்; மொழி முதலிய ‘குறிகள்’ கட்டமைக்கும் போலிமைதான் இவர்களுக்கு உண்மையாக இருக்கிறது; இந்த உலகத்தைப் புரிந்து கொள்வதும் இப்படிப்பட்ட ஒன்றுதான். இதைத்தான் முன்பு ‘மாயை’ என்ற சொல்லால் விளக்கினார்களோ என்று தோன்றும் எனக்கு.
நாம் பேசும் மொழி இல்லாமல் சிந்தனையென ஒன்று இருந்திருக்காதா? பறவைகள், விலங்குகள் எல்லாம் சிந்திப்பதே இல்லையா? அவைகள் மொழி பேசுவதில்லையே! என்றெல்லாம் கி.ரா. ஒரு நாள் என்னோடு விவாதம் நடத்தியிருக்கிறார்; நான் அந்த உரையாடலில் கூறியது நினைவுக்கு வருகிறது; நம்மொழி போல இல்லாவிட்டாலும் அவைகளுக்கிடையேயும் குறிகளான ஒரு மொழி அமைந்து அவைகளுக்குள்ளும் ஒருவகையான சிந்தனைத் திறனை வடிவமைத்திருக்கும்; என்றேன்.
நம்முடைய இந்தக் கணினியின் காலகட்டத்தில் – செயற்கை நுண்ணறிவெல்லாம் உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் நமது காலத்தில் மொழியின் இடத்தைக் கணினி கைப்பற்றி விட்டதோ எனத் தோன்றுகிறது. எப்படியும் எந்த ஒன்றிலும் நிச்சயமாக இதுதான் என்றோ எல்லாம் மனிதப் புரிதலுக்கு அடங்கியவைதான் என்றோ என்னால் கருதமுடியவில்லை.
கா.விக்னேஷ் : சிலப்பதிகாரத்தின் மீது தங்களின் வேட்கை எத்தகையது? ஏன்? இனி அதில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள் என்ன?
எட்டாவது படிக்கும்போது ‘ஊர்சூழ் வரி’யில் சிலபாடல்கள் பாடப்பகுதியாக இருந்தது. மதுரையில் தன்னந்தனியாக வெட்டுண்டு கிடக்கும் கணவன் மார்பில் விழுந்து “பொன்மேனி பொடியாடிக் கிடப்பதோ” என்று கண்ணகி புலம்பும் காட்சி. அதை எங்களுக்கு நடத்தியபோது ஆசிரியர் அழுதே விட்டார்; நான் உட்பட பலரும் அழுதே விட்டோம். அன்றிலிருந்து கண்ணகி என்கிற பாத்திரப் படைப்பு பத்திரமாக எனக்குள் தங்கிவிட்டது. எப்போதுமே அகதிகளாக, அனாதைகளாக வாழ நேர்ந்த உயிர்களை எதிர்கொள்ள நேரும்போது வள்ளலார்போல பதற்றத்திற்குள்ளாகி விடுவேன். ஏசுநாதரும் எனக்குள் இப்படித்தான் போய்ச் சேர்ந்தார்.
பின்னால் எனது ஆய்வுப் பொருளாகச் சிலப்பதிகாரம் ஆனபோது, அது பேசும் ‘தமிழ்த் தேசியம்’ என்ற சிந்தனை எனக்கு நெருக்கமான ஒன்றாக மாறியது. “தமிழ்த் தேசியம்” என்கிற ஓர் அரசியல் சிந்தனைக்கு இப்படியொரு அற்புதமான புனைவு வெளியைக் கட்டியெழுப்பிய ஒரு கவிஞரைக் காண்பதரிது. சிலம்பின் சீர்மை குறித்து இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்; இங்கு மேலோச்சும் சமய அறவியலும் தமிழ்த் தேசியத்திற்கெதிரான ஆதிக்கமொழி அறவியலும் சிலம்பின் பெருமையைப் பெரிதும் முன்னெடுக்கவிடாமல் செய்துவிட்டன.
இன்று நாம் படித்துக்கொண்டிருக்கிற சிலம்பு உ.வே.சா கொடுத்த சிலம்பு; அவருக்குப் பிறகு மூலத்தைப் பார்த்துப் பதிப்பிக்க யாரும் முயலவில்லை. தமிழ்ப் பல்கலைக்கழகம் கொண்டுவந்த பதிப்புகூட உ.வே.சா., பதிப்பித்த சிலம்புதான்; திருவான்மியூரில் நூலகத்தில் அவர் பார்த்துப் பதிப்பித்த அந்த மூலங்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றை மீண்டும் வாசித்துப் பார்த்து ஒரு பதிப்பைக் கொண்டுவர முயல்வது அடிப்படைத்தேவை என்று நினைக்கிறேன்.
அல்பர் கமியுவின் அபத்தக் கோட்பாட்டுத் தத்துவத்தைப் பயன்படுத்திச் சிலம்பைத் தத்துவார்த்தத் தளத்தில் ஆராய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இருப்புகளுக்கு நடுவில் இன்மைகள் எவ்வாறு இருந்து கொண்டிருக்கிக்கின்றன என்பதை விளக்கச் சிலம்பின் கதை பயன்படலாம். இன்றைக்குப் புலம்பெயர் இலக்கியத் திறனாய்வு பேசப்படுகிறது. அதனடிப்படையில் சிலம்புக்கும் புது வெளிச்சம் பாய்ச்சலாம். பின் நவீனத்துவ அடிப்படையில் நிச்சயமற்ற தன்மை, பிரதிக்குள் ஓடும் பிரதிக்கு எதிரான கூறுகள், மையமற்ற போக்கு என்று புதிய முறையில் ஆய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
கா.விக்னேஷ் : எடுத்துரைப்பியல் – மொழிதல் – கூற்று இவைகளுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமைப்பாடுகள் குறித்துச் சொல்லுங்கள்.
க.பஞ்சாங்கம் : என் மாணவர் முனைவர் சரவணன் (செம்மொழி நிறுவனம்) திருப்பத்தூர், சேக்ரெட் கலை, அறிவியல் கல்லூரி நடத்திய மின்வழிக் கருத்தரங்கில் இதுகுறித்துத் தெளிவான ஒரு கட்டுரை வழங்கியுள்ளார்; அது கிடைத்தால் படித்துப் பாருங்கள். எடுத்துரைப்பியல் கோட்பாட்டில் மிகவும் நுட்பமான இலக்கியக் கூறுகளுக்கெல்லாம் நூற்றுக்கணக்கான கலைச்சொற்களை ஆங்கில மொழியில் உருவாக்கி இருக்கிறார்கள்; அத்தனைச் சொற்களும் அதே நுட்பமான வேறுபாட்டோடு தமிழிலும் வரவேண்டும்; அப்பொழுதுதான் எடுத்துரைப்பியல் கோட்பாட்டின் அருமையை உணரமுடியும்.
நி.கனகராசு : தமிழ்க் கோட்பாட்டு முறையியல் எதனையெல்லாம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்? மேலும் பண்டைய இலக்கிய, இலக்கண மரபை நவீனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் சொல்லுங்கள்.
தமிழில் கோட்பாட்டு ஆய்விற்கான முயற்சியில் தமிழவன், பிரேம், ஜமாலன் முதலியோர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அது எதனையெல்லாம் உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென்று கேட்டால், நம்முடைய நவீன வாழ்க்கைப்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். பழைய இலக்கிய இலக்கணங்களை ஆய்வதும்கூட நம்முடைய இன்றைய பிரச்சனைகளை அலசுவதற்கான ஒருவகை முறையியலெனக் கருதி ஆராயவேண்டும்; ஆய்வு நம் சூழலை மையமாக வைத்து இயங்க வேண்டும்.
தமிழ்மொழி எவ்வளவோ மாறியிருக்கிறது; ஆனால் இடைக்காலத்தில் நன்னூல் செய்ததுபோல இன்றைய மாற்றங்களை உள்ளடக்கி ஒரு புதிய மொழி இலக்கண நூலை உருவாக்கி, அதன்படிதான் மொழியைக் கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் உட்பட அனைத்து அமைப்புகளும் கையாள வேண்டும் என்கிற ஒரு முறையியல் அவசரத்திலும் அவசரமாக நிலைநிறுத்தப்படவேண்டும். ஆனால் மொழியின் இன்றியமையாமை குறித்த புரிதல் இல்லா ஒரு சமூகமாகிவிட்ட தமிழ்ச் சமூகத்தில் என் ஓசை, அசையாக மட்டுமே நிற்கும் என்றும் எனக்குப் புரிகிறது.
செ.இர.வினிதா : கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ்ச் செவ்விலக்கியங்களைப் பார்ப்பது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது? அதன் தற்போதைய போக்கு எவ்வாறுள்ளது?
பழைய இலக்கியங்களை இன்றையக் கோட்பாட்டு அடிப்படையில் வாசிக்கும்போது இரண்டு விளைவுகள் உடனடியாக ஏற்படுகின்றன. ஒன்று, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு சூழலில், ஏதோ ஒரு நோக்கத்திற்காக எழுதப்பட்ட பிரதி, நம்முடைய நிகழ்காலப் பிரதியாகப் புத்துயிர் பெறுகிறது. இதன்மூலம் அந்தப் பிரதியின் வாழும் காலம் நீட்டிக்கப்படுகிறது; இரண்டாவது விளைவு, புதிய கோட்பாடுகள் குறித்த புரிதல் பன்மடங்கு உயர்கிறது. எதையும் செயல்படுத்திப் பார்க்கும்போதுதான் பல தெளிவுகள் புலப்படுகின்றன. அதே நேரத்தில் நம்முடைய தமிழ்த்துறைகளின் போக்கு ஆபத்தாக முடிந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. வெறுமனே கோட்பாடுகளைச் சூத்திரங்களாகச் சுருக்கி இலக்கியத்தின் அழகியலை அழித்து, வெறுமனே பழைய இலக்கியங்களையும் கோட்பாடுகளையும் சமப்படுத்தி இணைத்துவிடுகின்ற போக்குப் பல ஆய்வாளர்களிடம் தூக்கலாக வெளிப்படுகிறது, எச்சரிக்கை தேவை என்று சொல்லத் தோன்றுகிறது.
க. வினோதா : பின்காலனிய சூழலில் ‘சுயம்’ என்பது ஆபத்தானதா? அணுக்கமானதா?
இந்தியச் சூழலில் இது ஆபத்தானதாக மாறி இருக்கிறது; ‘காலனிய நீக்கம்’ என்பது பின்காலனியத்துவக் கோட்பாட்டில் முக்கியமான ஒரு முன்னெடுப்பு; தேசியச்சமூக வாழ்க்கைக்கு அணுக்கமானது, ஆனால் எங்கள் தேசிய சுயத்தைத் தோண்டி எடுத்துக்கொண்டாடப் போகிறோம் என்ற பேரில், ஆழக்குழி தோண்டிப் புதைக்க வேண்டிய சாதியின் பெயரலாலும் மதத்தின் பெயராலும் கடைப்பிடிக்கப்பட்ட பழம் குப்பைகளையெல்லாம் “எங்கள் தேசிய பண்பாடு” எனப் புனைந்து மகிழ்வது பழைய நிலவுடைமைச் சமூகக் கொடுமைக்கே நம்மைக் கொண்டு சென்றுவிடும். முற்போக்குச் சக்திகள் பலமிழந்து கிடக்கும் நிலையில் மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகள் ‘சுயமான தேசியம்’ என முழங்குவது பெரும் ஆபத்தாகத்தான் முடியும். சுத்தமான கலப்பில்லாத தேசியம் என்பது உலகம் முழுவதும் எப்பொழுதுமில்லை; இப்பொழுதுமில்லை; ஆனால் அடக்கி ஆள நுண்ணிய பல வழிகளைத் தேடி அலையும் அதிகார சக்திகள், பொய்யை மெய்யாகக் கட்டமைப்பதில் வரலாறுதோறும் வெற்றி பெற்று வந்துள்ளன. பிறகு ஒரு புரட்சி வந்துதான் புரட்டிப்போட நேர்ந்துள்ளது.
கா.விக்னேஷ் : தமிழாசிரியர்கள் கோட்பாடுகள் குறித்துப் பேசத் தொடங்கியபோது, ஏற்பட்ட இடர்பாடுகள் எவை? தங்களுக்கு எந்தச் சூழலில் இவற்றில் ஏற்பட்டது?
தமிழாசிரியர்களில் ஞானி, தமிழவன், கோ.கேசவன் முதலியோர் மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகளைக் கல்வி வளாகத்திற்குள் அறிமுகப்படுத்தத் தொடங்கிய எழுபதுகளில் ஈழத்துப் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் இங்குள்ள மரபார்ந்த தமிழ்ப் பேராசிரியர்களால் கடும் புறக்கணிப்பிற்கும், வசைபாடலுக்கும் உள்ளாகி இருந்தனர். திராவிட இயக்க அரசியல் பின்புலத்தில் சங்ககாலம் பொற்காலம் என்றெல்லாம் கட்டமைக்கப்பட்டிருந்த தமிழ்ச்சூழலில் மார்க்சியத் திறனாய்வாளர்கள் வர்க்க அடிப்படையில் பழந்தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்ந்து சான்றுகளோடு தலைகீழாக மாற்றி அமைத்தனர். சங்க இலக்கியத்தைக் கிரேக்கத்திலுள்ள வீரநிலைப் பாடல்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற கைலாசபதி சங்கப் பாடல்கள் வாய்மொழிப் பாடல்களுக்குரிய கூறினைக் கொண்டிருக்கிறது என்று நிறுவியபோது கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இப்படிப் புதிய கோட்பாட்டு நோக்கில் பழைய பிரதிகளை வாசிப்பிற்கு உட்படுத்தும்போது நமது தமிழ்த்துறைகள் ஆராய்ச்சிப்பூர்வமாக அதை எதிர்கொள்ளாமல் தங்களிடம் உள்ள அதிகாரத்தால் மௌனமாக்கிவிட முயல்வதை நானும் என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். கபிலரின் குறிஞ்சிப்பாட்டும் பாலின அரசியலும் என்றொரு கட்டுரையைப் பெண்ணியல் கோட்பாட்டின் அடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலுள்ள மொழித்துறை நடத்திய கருத்தரங்கில் வாசித்தேன். அந்தக் கட்டுரையில் எவ்வாறு பெண் மொழியற்றவளாக நிலைநிறுத்தப்படுகிறாள்; ஆணின் மொழியாடல் எவ்வாறு மேலெடுக்கப்படுகிறது என்பது குறித்து விவாதித்தேன். நான் அவ்வாறு அந்தப் பிரதியை அணுகுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத மூத்த பேராசிரியர்கள், “நேரம் முடிந்து விட்டது! அமருங்கள்” என்று சொல்லி வாசிக்க விடாமல் தடை செய்தார்கள்; நானும் நேரம் முடிந்துவிட்டது என்று நான்கு மூன்று தடவை சொல்லுகின்ற வரைக்கும் விடாமல் சொல்லிவிட்டுத்தான் இறங்கினேன்.
நான் எதிலும் அடிப்படையான மெய்மையை நோக்கிச் சிந்தித்துப் பழகியவன்; அதனாலேயே தத்துவத்துறை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தத்துவத்தில் எம்.ஏ., படிப்பதற்காக திருப்பதி வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வியில்கூடப் பணம் கட்டிக் கொஞ்ச நாள் படித்தேன்; கோட்பாடுகள் என்பவையும் இத்தகைய அடிப்படை மெய்மையைத் தனது இயங்குதளமாகக் கொண்டவைதான்; இந்தப் பண்பினாலேயே இலக்கியக் கோட்பாடுகள் என் நெஞ்சுக்கு நெருக்கமாகிவிட்டது போலும்.
செ.இர.வினிதா : மார்க்சியம் போன்ற மேலைக் கோட்பாட்டைத் தமிழ் மார்க்சியம் என்று அடையாளப்படுத்துவதன் தேவை என்ன? மேலும் அவ்வாறு அடையாளப்படுத்தும்போது ஏற்படும் சிக்கல் என்ன?
இந்த வினாவிற்கான விடையை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் இங்கே நிறுவனமயப்பட்ட ‘கட்சி மார்க்சியம்’ எப்படிச் செயல்பட்டது என்ற வரலாற்றைத் தெரிந்தால்தான் தெளிவு கிடைக்கும். கட்சி மார்க்சியம், மார்க்சியக் கோட்பாட்டை முன்பு நான் சொன்னதுபோல வெறும் சூத்திரமாகச் சுருக்கி எல்லாவற்றையும் விளக்கியது; இங்கே உள்ள சாதிய அமைப்பு, தேசியப் பிரச்சனைகளைக்கூட, அவற்றின் தீவிரத்தைக் கூட – கட்சி மார்க்சியம் பொருட்படுத்தாமல் செயல்பட்டது; மார்க்சியத்தை வடிவமைத்த காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் முதலியோர் எல்லாம் தேசியப் பிரச்சனை குறித்து விரிவாக விவாதித்திருக்கிறார்கள் அவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காமல் பக்கத்தில் ஈழத்தில் பெரும்பான்மை தேசியவாதம் மூர்க்கமாகச் சிறுபான்மைத் தேசிய இனமான தமிழினத்தை ஒடுக்கி அழிக்க முயலும்போது கூட இங்குள்ள கட்சி மார்க்சியர்கள் தேசியம் பேசாமல் வர்க்கப் போராட்டத்தை முன்மொழிந்து கொண்டிருந்தார்கள்; இதைப் போலவேதான் இங்குள்ள சாதியப் பிளவுகள் குறித்தும் கருத்துக் கொண்டிருந்தனர்; இத்தகைய ஒரு சூழலில்தான் தமிழ் மார்க்சியம் என்ற கருத்தாக்கம் முன்னுக்கு வந்தது; கோவை ஞானி, பெ.மணியரசன், இராசேந்திர சோழன் முதலியோர் தமிழ்த்தேசியம் சார்ந்து மார்க்சியத்தை விளக்கினர்; தொடக்கத்திலேயே இந்தப் பார்வையைக் கட்சி மார்க்சியர்கள் (இன்று ஏற்றுச் செயல்படுகிறார்கள்) மேற்கொண்டிருந்தால் அதன் விளைவு வேறாக இருந்திருக்கும்.
இவ்வாறு தேசியத்தை முன்னெடுக்கும்போது கவனம் தேவை. ஏனென்றொல் தேசியம், பாசிசமாகப் பெறக்கூடிய அத்தனை சாத்தியப்பாடுகளும் கொண்டது; ஜெர்மனியில் ஹிட்லரின் தேசிய அரசியலே இதற்குச் சான்று; தேசியம் என்ற பெயரில் இலட்சக்கணக்கான யூதர்களைக் கொடூரமான முறையில் கொன்றொழித்த அந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்தித் தேசிய அரசியலைக் கையில் எடுக்க வேண்டும். கத்தி முனையில் நடப்பது போன்ற சாகசம் நிறைந்த பயணம் இது.
கா.விக்னேஷ் : பின்னை நவீனத்துவச் சிந்தனையின் வருகைக்குப் பிறகு தமிழில் பண்பாட்டு, அரசியல், பொருளியல், இலக்கியம் ஆகியவற்றின் ஆய்வுத்தளங்களில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன?
மற்றவைகளைப் பற்றி எனக்குத் தெரியாது; இலக்கியத் தளத்தில் பின்னை – நவீனத்துவச் சிந்தனைகள் படைப்பிலக்கியத்திலும் ஆய்வு முயற்சிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று உறுதியாகக் கூறமுடியும்; தலித்தியம், பெண்ணியம் என்ற விளிம்புநிலைக் கோட்பாடுகளின் உருவாக்கத்திற்கும் பின்னை – நவீனத்துவச் சிந்தனைகள்தான் பெரிதும் உரமாக இருந்தன என்பது வெளிப்படை. ஆதிக்க உரையாடலுக்கு எதிரான மாற்று உரையாடலைத் தமிழ்வெளியில் விதைப்பதற்கு இச்சிந்தனைகளே துணைநிற்கின்றன. மொழியை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்கள்தான் சமூகவெளியில் “உண்மைகளைக்” கட்டமைக்கிறார்கள்; எனவே ஆதிக்க அரசியலை அசைப்பதற்கு மொழியைக் கைப்பற்றுவதுதான் முதல்வேலை என்ற புரிதல், இன்றைய இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ளது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பலாம்.
நி.கனகராசு : இன்றைய இணைய உலகச் சூழலில் தமிழாய்வுப் போக்குகள் ஒருவிதத் தேய்வினைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? நீங்கள் ஆய்வு செய்த காலத்தோடு ஒப்பிட்டுச் சொன்னால் சிறப்பாக இருக்கும்.
நான் அப்படிக் கருதவில்லை. எல்லாக் காலத்திலும் போலவே பட்டத்திற்காக ஆய்வு என்று ‘பாவலா’ பண்ணுபவர்கள் கூடுதலாகவும், ஆய்வு என்னும் தீவிரத்திற்குள் தன்னை இழந்து பயணிப்பவர்கள் குறைவாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை; இன்னும் சொல்லப்போனால் எங்கள் காலத்தை விட, இன்று ஆய்வு செய்வதற்கான வசதிகளும் இந்தக் காலனியுகத்தில் சிறப்பாகக் கூடி வந்துள்ளன. புதுச்சேரியிலுள்ள வரலாற்று ஆய்வாளர் ஸ்டீபன் உலகத்திலுள்ள நூலகங்களுக்கெல்லாம் சென்று ஆய்வதற்காகவே தன் வாழ்வைப் பணயம் வைத்துவிட்டார். சென்னையில் பழ. அதியமான் துல்லியம் தேடும் கடும் உழைப்பாளி, இன்னும் பலர்; நமக்கு இத்தகைய உழைப்பாளிகள் பழக்கம் ஏற்படுவதில்லை; எற்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே மனச்சோர்வு கொள்ள வேண்டியதில்லை. தீமை எப்பொழுதும் ஆரவாரமாகத்தான் இருக்கும். நாம் அதைப் பார்த்து பயந்துவிடாமல் நம் உழைப்பை நாம் தொடர்புவிடாமல் செலுத்திகொண்டே இருந்தால் போதும். அதற்கான பயன் நிச்சயமாகக் கிடைக்கும்.
க. வினோதா : கல்விச் சூழல் எதிர்கொள்ளப் போகும் அச்சம் தரும் சிக்கலாக எதைக் கருதுகிறீர்கள்?
புதுச்சேரிப் பல்கலைக்கழக மாணவர் வீரமணி சென்ற மாதம், பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் “நெட்” தேர்வின் வினாத்தாள் பட்டியலைக் கொண்டுவந்து என்னிடம் காட்டினார்; பயந்து போனேன்; எல்லாமே “டிக்” அடிக்கிற பதில்தான்; எந்த இடத்திலும் ஒரு நான்கு வரி கூட வாக்கியம் பிரித்து எழுத வேண்டிய தேவையே இல்லை; மொழியை – அதன் எடக்கு முடக்கான நடையை- அது உள்ளே வைத்திருக்கும் உரத்த சிந்தனையை – மூளை வாசித்துப்பழகும் போதுதான் ஒரு தனிமனிதனின் ஆளுமைத் திறமும் சூழலைக் கையாளும் மனவலுவும் கூடிவரும்; இப்பொழுது மாறியிருக்கும் இந்தக் கல்விமுறையில் சிந்திக்க வேண்டாம்; கணினி மாதிரி தகவல்களைத் திரட்டிச் சேமித்து வைத்துக்கொண்டால் போதும்; “மனிதர்களை உயிருள்ள இயந்திரமாக” வடிவமைக்கும் உலக ஏகாதிபத்தியங்களின் சூழ்ச்சியாக எனக்குப்படுகிறது, “அதிகாரம் அதுவும் முழு அதிகாரம் முற்றிலுமாகச் சுரண்டும்” என்பதற்கேற்ப மனித உயிரின் உள் வடிவமே வருங்காலத்தில் முழுதாகச் சுரண்டப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன்.
நி.கனகராசு : இன்றைய ஆய்வாளர்களின் முன்னால் இருக்கும் சவால்களாக எதைக் கருதுகிறீர்கள்?
கல்வி நிறுவனங்களில் ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைப்பாடுகள் குறித்து எல்லோரும் அறிவீர்கள். இத்தகைய ஒரு சூழலில் தரமான ஆய்வாளராகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளுதல் என்பது சவாலான ஒன்றுதான். வாசிப்பு! வாசிப்பு! உழைப்பு! உழைப்பு! சூழல் குறித்த ஆழமான தேடலோடு கூடிய பார்வை. புதியவை நோக்கில் பாய்தல்; பக்கம் பக்கமாக வாசிப்பது போலவே பக்கம் பக்கமாக எழுதிப்பழகுதல்; எந்தத் துறையிலாய்வு செய்கிறீர்களோ அத்துறை சார்ந்த அறிஞர்களாக அறியப்படுபவர்களோடு தொடர்பை உருவாக்கிக்கொள்ளுதல் – இவைகள் உங்கள் ஆய்வைச் செம்மையாக்க உதவும்.
செ.இர.வினிதா : புதிய தமிழாய்வுக் களன்கள் குறித்துச் சொல்லுங்கள்
நமக்குத் தொடர்பு விடாத குறைந்தது 2500 ஆண்டுகால வரலாறும் இலக்கியமும் கண்முன் இருக்கின்றன; ஆய்வுக் களன்களுக்குப் பஞ்சமில்லை; காலத்தின் தேவைக்கேற்ப அடையாளம் கண்டு ஆய்வை நிகழ்த்திச் சொல்வதில்தான் இங்கே சிக்கலாக இருக்கிறது. குறிப்பாக இன்று உலக அரசியல் என்பது குறிப்பிட்ட, கை எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடிய சிலரின் அதிகாரவெறிக்கான ஒன்றாக மாறி இருக்கிறது; இதன் விளைவாக உலக நாடுகள் பலவற்றிலும் பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்டவர்களே அரசு அதிகாரத்தைக் (இந்தியா உட்பட) கைப்பற்றிக் கொண்டு குரங்காட்டம் ஆடுகிறார்கள்; இத்தகைய சூழலில் ‘அதிகாரம்’ குறித்த உரையாடலை உருவாக்க வேண்டியது சிந்திப்பவர்களின் கடமை. நமது தமிழிலக்கியச் சூழலில் சங்க காலம் தொடங்கி இன்றுவரையிலான அதிகாரத்தின் செயல்பாட்டை விளிம்புநிலைப் பார்வையில் நின்று கொண்டு ஆராய்ந்தால் அற்புதமான ஒரு புதிய இலக்கிய வரலாற்றை வடிவமைக்க முடியும். இ.முத்தையா, ஆர். சிவசுப்பிரமணியம், முத்துமோகன் முதலிய கல்வியாளர்கள் இந்தத் திசையில் இயங்கி உள்ளார்கள். புதிதாக வரும் ஆய்வாளர்கள் இந்தச் சரடைப் பிடித்துக் கொண்டு ஆராய்ந்தால் அதிகாரம் குறித்த உரையாடலைத் தமிழ்வெளியில் வளர்த்தெடுக்க முடியும்.
இதுபோலவே புதிய பெண்ணியக் கோட்பாட்டு அடிப்படையில் நமது இலக்கியங்கள் அனைத்தையும் ஆராய்ந்து இருக்கிற இலக்கிய வரலாறுகளைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டுவிட முடியும். இப்படி ஆய்வாளர்கள் புதிய களங்களைக் கண்டெடுப்பதுதான் ஆய்வுமுயற்சியின் முதல்படி. அதற்குச் சமூகப் பிரக்ஞையும் தொடர்வாசிப்பும் கலந்துரையாடலும் ஆய்வாளர்க்கு இயல்பான ஒன்றாக மாறிவிட வேண்டும். இங்கே ஒன்றை நினைவுறுத்தி இந்த கலந்துரையாடலை முடிக்கிறேன். அதாவது ஆராய்ச்சி என்பதும் ஒருவிதமான அரசியல் செயல்பாடுதான் என்ற புரிதல் இளம் ஆய்வாளர்க்கு இருக்க வேண்டும்.
குறிப்பு : மின்னஞ்சல் வழியாக எங்கள் கேள்விகளை அனுப்பியிருந்தோம். அதற்கான தன் கருத்துகளைக் கைப்பட எழுதி அனுப்பியிருந்தார். அவற்றில் தன் ஆய்வு அனுபவங்கள், தமிழ் ஆய்வுப்போக்கு, வழிகாட்டுதல், தீர்வுகள், அறிவுரைகள் என அழகானதொரு உரை
யாடலாக அமைந்துள்ளது.